கால் பாதம் துர்நாற்றத்தை நீக்க சிறந்த வழிகள்

கால் பாதம் துர்நாற்றத்தை நீக்க சிறந்த வழிகள்

பெரும்பாலும் அலுவலகத்திற்கு ஷு போட்டு செல்லும் பலரும் இந்த பிரச்சனையை சந்திப்பார்கள். அதுவும் கோடைக்காலங்களில் சொல்லவே வேண்டாம். கால்களுக்கு காற்றோட்டம் கிடைக்காத நிலையில் அங்கு பாக்டீரியாக்கள் பெரிய அளவில் தங்கி துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இதனால் அலுவலகங்களில் சங்கடங்கள் நேர கூட வாய்ப்பு உண்டு. அதை எப்படி சரி செய்வது என்பதைப் பார்க்கலாம். அதுவும் இயற்கை வழிகளில்.

சர்க்கரை ஸ்கரப்

3 டீ ஸ்பூன் சர்க்கரையுடன் ஒரு பங்கு நீர் மற்றும் 5 பங்கு ஐசோ ப்ரோபைல் என்ற ஆல்கஹால் கலந்த ஒரு கலவையான பேஸ்ட் மாதிரி தயார் செய்து கொள்ள வேண்டும். பின் அதை பாதத்தில் தடவி 5 முதல் 15 நிமிடங்கள் அப்படியே ஊற வைக்க வேண்டும். இதனால் பாக்டீரியாக்கள் விரைவில் இறந்துவிடும்.

பின்னர் வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவி விட வேண்டும். இதை வாரத்தில் 3 முறை செய்து வந்தால் கால் துர்நாற்றப் பிரச்சனை நீங்கும்.

வினிகர்

கால் துர்நாற்றத்தை நீக்க வினிகர் பெருமளவில் பயன் படுகிறது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. வினிகர் பாதத்தில் உள்ள அமிலத்தன்மையை அதிகரித்து துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து துர்நாற்ற பிரச்சனையில் இருந்து தீர்வு கொடுக்கிறது.

ஒரு அகலமான பாத்திரத்தில் கால் பாதம் நனையும் அளவுக்கு வெதுவெதுப்பான நீர் ஊற்றி அதில் ஒன்னரை கப் வினிகர் சேர்த்து கலக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் சுமார் 15 நிமிடம் அதில் காலை ஊற வைத்து பின்னர் சோப்பு போட்டு கழுவி விட வேண்டும். இந்த வழிமுறையும் துர்நாற்றத்தை போக்கும்.

போரிக் அமிலம்

கால் பாத துர்நாற்றத்தை நீக்க இதைவிட சிறந்த வழி இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இதில் உள்ள அமிலங்கள் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அடியோடு அழித்துவிடும் சக்தி கொண்டது. அதுமட்டுமில்லாமல் போரிக் அமிலம் பவுடரை வியர்க்கும் பகுதிகளில் அவ்வப்போது போட்டு வந்தாலே போதுமானது.

அப்படி இல்லை என்றால் ஒன்னரை கப் பேக்கிங் பவுடருடன் 2 கப் வினிகர் சேர்த்து அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் எடுத்து கொள்ள வேண்டும். அந்தச் ஸ்பிரேவை நாம் தினமும் ஷு அணியும்போது அதில் தெளித்துக் கொள்ளலாம்.

பிளாக் டீ

இதில் உள்ள டேனிக் அமிலம் கால்களில் உள்ள துர்நாற்றத்தை நீக்கி வியர்வை படிவதைத் தடுக்கிறது. கொஞ்சம் அதிகமான பிளாக் டீ தயார் செய்துகொண்டு அதை தனி ஒரு வாலியில் சுடு நீருடன் சேர்த்து அதில் காலை ஊற வைத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கால் துர்நாற்றத்தில் இருந்து விடுபட இந்த வழிமுறையும் சிறந்ததாக கருதப்படுகிறது.

பேக்கிங் சோடா

சோடியம் கார்பனேட் எனப்படும் பேக்கிங் சோடா கால் பாதத்தில் இருந்து வீசும் துர்நாற்றத்தைப் போக்க பெரிய அளவில் உதவி செய்கிறது. இது வியர்வையில் உள்ள pH அளவை குறைத்து துர்நாற்றத்தை போக்க வழிவகை செய்கிறது.

ஓரளவுக்கு சூடான நீரை எடுத்துக் கொண்டு அதில் பேக்கிங் சோடாவை கலந்து சுமார் பத்து முதல் பதினைந்து நிமிடம் தங்களது பாதத்தை ஊர வைத்து கழுவி வந்தால் கால் பாதத்தில் வரும் துர்நாற்றத்தை போக்கிவிடும். ஷு போட்டால் எப்படியும் துர்நாற்றம் வரும் என யோசிப்போர் பேக்கிங் சோடாவை கொஞ்சம் ஷுக்களில் போட்டுக்கொள்ளலாம்.